நானும் ஒருவன்
பொருளாதாரத்திற்காக
உயிராதாரத்தை
மறந்து திரியும்
மன்னிக்க முடியா
மகன்களில்
நானும் ஒருவன்
சோறு போட்டு வளர்த்த
தாயையும் தாய்நாட்டையும்
தவிக்க விட்டுவிட்டு
தரணியை நோக்கி
தாவி வந்திருக்கும்
பாவிகளில்
நானும் ஒருவன்
எங்களின் கனவுகளுக்காக
அவளின் உறக்கம் விற்றவள்
எப்பொழுதும் எந்நொடியும்
எங்களையே எண்ணி
வாழ்ந்து கொண்டிருக்கிறாள்
எப்போதாவது மட்டுமே
எண்ணிக்கொண்டு வாழ்க்கையை
நொந்து கொண்டிருக்கிறோம் நாங்கள்
ஏதேனும் ஒன்று காத்திடுமென
ஏழு பெற்றாள் என் அம்மா
ஏழும் எட்டுத்திசைகளில்
தான் பெறுவதற்காகவும்
தான் பெற்றதற்காகவும்
தன்னை மறந்து
அலைந்து கொண்டிருக்கிறது
அம்மாவென கூப்பிட்டுக்கேட்டதில்லையவள்
அதற்க்கு அவசியமும் வைத்ததில்லையவள்
எந்த ஒரு மொழியும் அறிந்ததில்லையவள்
எங்களின் விழி மொழியைத் தவிர!
உலகமே அறிவாள் அவள் - ஆமாம்
அவள் உலகமே நாங்கள் தானே!
தனிமையான தருணங்களில் மட்டுமே
தாயின் ஞாபகங்கள் எங்களுக்கு
நாங்கள் இல்லாததே
தனிமையாகிப்போனது என் தாய்க்கு
சொந்த மண்
நல்ல நண்பர்கள்
கோவில் திருவிழா
காதல் காமம்
வீடு உறவு
தமிழ் தாயென
சகலத்தையும் தொலைத்து விட்டு- எந்த
சன்மானத்தை தேடி அலைகிறோம்?
சத்தியமாய் தெரியவில்லையெனக்கு
என்ன செய்வது
பணம் பத்தும் செய்யும்- இங்கே
பத்தையும் மறக்க வைக்கிறது
எல்லாத்தையும் மறந்து விட்டு
எனக்கென்ன வேலை இங்கே?
எப்படி குறைக்கலாம் ஞாகப மறதியை
என யோசித்தல் தான்!
இப்படிக்கு
அமெரிக்க டாலர்களில்
அம்மாவை மறந்திருக்கும்
அனேக இளைஞர்களில்
நானும் ஒருவன்
--------------------------------பாலு முத்தையா
4 comments:
yaaruya nee....
chancea illa...
சொந்த மண்
நல்ல நண்பர்கள்
கோவில் திருவிழா
காதல் காமம்
வீடு உறவு
தமிழ் தாயென
சகலத்தையும் தொலைத்து விட்டு- எந்த
சன்மானத்தை தேடி அலைகிறோம்?
சத்தியமாய் தெரியவில்லையெனக்கு
என்ன செய்வது//
அப்படியே என் உணர்வு.
)))))
Meena, குடுகுடுப்பை, ஆட்காட்டி வருகைக்கு மிக்க நன்றி......
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்