Wednesday, October 22, 2008

லேய்! மக்கா கடல் குளிக்க போம்மாலே...

சுமார் இருபது வருடங்கள் பின்னோக்கி சென்றால் அதாவது கேபிள் டிவி என்னும் அரக்கனும் கிரிக்கெட் என்னும் காலனும் கிராமங்களை ஆக்கிரமிப்பு செய்யாதிருந்த காலம். இன்றுதான் கேபிள் டிவி கிராமத்து வாழ்கையை துவைத்து தும்சம் பண்ணிவிட்டதே.

திங்கள் முதல் வெள்ளி வரையிலான காலை ஒன்பது மணி முதல் சாயும்காலம் நான்கு மணிவரையுள்ள அந்தக்காலம் அதாங்க பள்ளிகூட நேரம் சிறையில் அடைக்கப்பட்டது போன்று ஒரு உணர்வு. பள்ளி விட்டதுதான் தெரியும் வீட்டில் இருப்போம் அப்புறம் என்ன பள்ளிகூட புத்தககூடை வீட்டின் ஒரு மூலையில். மேல்சட்டை மட்டும் கழற்றி அசலில் (கொடி) மாட்டிவிட்டு நேராக பக்கத்தில் உள்ள கோயில் மைதானத்தில் கூடிவிடுவோம். கிராமத்தில்தான் ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு விதமான விளையாட்டுகள் உண்டே. நாங்கள் விளையாடிய விளையாட்டுகள் சில: கௌண்டேஸ் ( பேஸ் பால் போன்றது), சிகரெட்டு கூடு எறிதல், கிளியாந்தட்டு, கிளிபாஸ், கபடி, வாலிபால், கொல்லன்கொட்டை எறிதல் etc. இது பற்றி என்னொரு பதிவில் விளக்கமாக எழுதுகிறேன்.

இரவு ஏழு மணிவரை விளையாட்டுதான் அப்புறம் அம்மா தேடிவருவாங்க, எதுக்குனா படிக்கவேண்டுமே. அப்புறம் ஒரு வழியா விளையாடிவிட்டு சிலநேரம் கை கால்களை கழுவிவிட்டு சாப்பாடு. அப்புறம் ஒரு பழைய ஓட்ட ரேடியோ வீட்டுல இருக்கும் அது சிலநேரம் sorry பலநேரம் பாடாது அப்பு
றம் அதுல எதாவது சின்ன குச்சிய வச்சி செருகி எப்படியோ நாகர்கோயில் ரேடியோ ஸ்டேசன் புடிச்சி அதுல ஒருநாளைக்கு அரைமணிநேரம் சினிமா பாட்டு போடுவான் அதை கேட்டுகிட்டு மெதுவா ரெம்ப கஷ்டப்பட்டு எதாவது ஒரு புக்க எடுத்து சும்மாவேனும் ஒரு அரை மணிநேரம் படிக்கிறது. புத்தகத்தை எடுத்துதான் தெரியும் எங்கிருந்துதான் கொட்டாவி வருமோ தெரியல அவ்வளவுதான் தூக்கம் கண்ணை சுற்றும், சிலநேரம் நான் படுத்துகிட்டே படிக்கிறேன் என்று சொல்லி அப்படியே தூங்கிவிடுவதும் உண்டு. காலையில் அம்மா மாட்டுக்கு பால் கறக்க நாலு மணிக்கே எழும்பிவிடும் அப்புறமா எங்களையும் எழுப்பிவிட்டு படி என்று சொல்லிவிட்டு பால் கறக்க போய்விடும். பல்லுகூட விளக்காம அப்படியே ஒரு கொட்டவிய விட்டு அரை தூக்கத்தில் எதையாவது வசித்து விட்டு அப்படியே அதிகாலை தூக்கத்தையும் தூங்கி எந்திருச்சு நண்பர்களுடன் சேர்ந்து வயல்காட்டில் ஓடி வரும் வற்றாத ஜீவநதி ஆலன்கால்வாயில் போய் கலக்கு கலக்கு கலக்கி அங்க குளிக்க வர்றவிங்ககிட்ட திட்டு வாங்கிகிட்டு தலைய ஒழுங்கா துவட்டாம வீட்டுக்கு வந்து நேற்று களத்தி போட்ட சட்டைய எடுத்து போட்டுகிட்டு பள்ளிக்கூடம் போவேம் இப்படியே அந்தவாரம் ஓடிவிடும்.

சனி மற்றும் ஞாயிறு தான் வாழ்கையில் ரெம்ப சந்தோஷமா
ன தினங்கள். வார இறுதியில் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து முக்கியமாக லிங்கதுரை (சுனாமியால் சுருட்டபட்டு எங்களைவிட்டு போனவன்) அவன் இருந்தாலே அந்த இடம் ஒரே சிரிப்பும் கொண்டடமாகவும் இருக்கும். அவன்தான் மெதுவாக சொல்லுவான் மக்களே! கடல்குளிக்க போமாலே என்பான், உடனடியாக நாங்கள் ஆட்களை கூட்டுவோம் சுமார் இருபது இருபத்தைந்து பேர் ஒண்ணா சேர்ந்து கிளம்புவோம்.

எங்கள் கிராமத்தில் இருந்து கடற்கரை அரை கிலோமீட்டர் தொலைவுதான். கடலை நோக்கி நடக்க ஆரம்பித்தால் முதலில் பெரிய தென்னம் தோப்புகள் வரும் அதன்பின் பெரிய வயல்காடு வரும் அதனைத்தொடர்ந்து பெரிய மேடு அதிலும் முக்கால்வாசி தென்னை மரங்களே சிலர் கம்புகிழ
ங்கும் (மரவள்ளிகிழங்கு) வாழையும் பயிர் இட்டுருபார்கள். அதனை தொடர்ந்து பெரிய காத்தாடி (சவுக்கு) மரக்கூட்டம் வரும். அதனை தாண்டி சென்றால் அங்கு சிலர் கடல்மணலில் உருவான கற்களை வெட்டிஎடுத்து கொண்டிருப்பார்கள் (கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த கற்களால் கட்டப்பட்ட வீடுகளை காணலாம்).

கொண்டுவந்த முண்டுகளை (டவல்) எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு கூட்டமாக கடலில் இறங்குவோம். முதலில் லிங்கதுரை தான் ஆரம்பிப்பான் மக்கா உறை (Mole crab) பிடிக்கலாம் என்று. நாங்களும் சரிஎன்று சொல்லி உறைபிடிக்க ஆரம்பிப்போம். உறை ஒவ்வொரு முறையும் கடல் அலை வெளியே வரும்போது அலையுடன் சேர்ந்துவரும் ஆனால் அவை கடல் அலை உள்ளே செல்லும்போது செல்லாமல் கரையிலே வேகமாக
மணலில் புதைந்து உள்ளே செல்லும் அதனை நாங்கள் கூர்மையாக கவனித்து வேகமாக ஓடி மண்ணை குடைந்து பிடித்து வெளியே எறிவோம் எங்களுடன் வரும் சிறுவர்கள் அதனை பொறிக்கி வைத்துகொள்வார்கள். அப்படியே சுமார் இரண்டு மூன்று கிலோமீட்டர் கடற்கரையோரமாக சென்று பழயபடி வந்த இடத்திற்கு திரும்புவோம். பிடித்த உறைகளை ஓரமாக வைத்துவிட்டு கடலில் இறங்கி குளிக்க ஆரம்பித்தால் கண்டிப்பாக இரண்டு மணிநேரம் ஆகிவிடும். நாங்களெல்லாம் சுமார் ஒரு கிலோமீட்டர் உள்ளே நீந்தி செல்வோம். சிலர் கடற்கரையோரமாக குளிப்பார்கள் அவர்கள் உடம்பு முழுவதும் மண்ணாகத்தான் இருக்கும். எவ்வளவு பெரிய அலையாக இருந்தாலும் நாங்கள் பயப்படாமல் உள்ளே நீந்தி செல்லும் முறையே மிகவும் அலாதியாக இருக்கும், சிலர் அலையில் அடிபட்டுவிட்டால் அமைதியாக கரை ஒதுங்கி மண்ணில் படுத்துவிடுவார்கள். எவன் ஒருவன் அமைதியாக கரை ஒதுங்குகிறானோ அவன் கண்டிப்பாக அலையில் அடிவாங்கியுள்ளான் என கண்டுபிடித்துவிடலாம். அப்புறம் இடைவேளை விடுவோம் அதாவது எல்லாரும் கரையேறி கடற்கரை சுடுமணலில் படுதுகொள்வோம்...ஆஹா என்ன சுகம்......
இதுதாங்க "உறை"

மீண்டும் ஒருமுறை கடலில் இறங்கி உடலில் உள்ள மணல் எல்லாம் கழுவிட்டு கட்டிய டவலோடு கல் வெட்டிய குண்டுகள் ((கிடங்கு அல்லது பள்ளம்) அல்லது எதாவது பெரிய சவுக்கு மரத்தின் கிழே சென்று காய்ந்த விறகு பொறுக்கி பிடித்த உறை எல்லாம் போட்டு சுடுவோம். பின்னர் வட்டமாக உட்கார்ந்திருந்து சுட்ட உறைகளை பக்குவமாக சாப்பிட்டுவிட்டு வயல்காட்டில் வந்து வாய்க்காலில் குளித்துவிட்டு வீட்டுக்கு போனால், அம்மாவும் அப்பாவும் எங்கலே போன்னே என்று கேட்டவாறு சவுக்கு கம்பால் வெளு வெளு என்று வெளுத்து எடுப்பார்கள். பக்கத்து வீட்டிலும் நான் இனி கடல் குளிக்க போகமாட்டேன் மா என்று அழுகுரல்கள் ஒலிக்கும் .....

1 comment:

SEKAR70 said...

ஏலா நீ எங்க ஊரு ஆளா..சூப்பர்

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats