Friday, October 10, 2008


அம்மா

லேய்! சாமி சீக்கிரம் எந்திரில கலேஜிக்கு போகவேண்டமாடா என்று புஷ்பவதியாம்மா கத்தியவாறு அவன் முகத்தில் தண்ணியை தெளித்தாள். சாமியோ, அம்மா நேற்று நான் உறங்குவதற்கு மூன்று மணியாச்சுமா என்று புலம்பியபடி எழுந்தான். காலையில் ஒரு நாளாவது ஒழுங்கா உறங்கவிடுறிங்களா என்று புலம்பியவாறு வாயில் சிறிது உமிகரியை அள்ளிபோட்டுகொண்டு பல்லை தேய்த்தப்படி தெப்பகுளத்தை நோக்கி குளிபதற்காக சென்றான்.

அடுப்பன்கரைக்கு சென்ற அம்மா காலை சாப்பாடு செய்வதில் முனைப்புடன் ஈடுபட்டாள். பக்கத்து ரூமில் தூங்கிய இளையமகன் செல்வன் அம்மா பசிக்குது என்று அழுதவாறு அம்மாவின் கால்களை கட்டிபிடித்துகொண்டான். மாட்டுக்கு புல்லு பறிக்க வயலுக்கு சென்ற மாற்ற குழந்தைகளை நினைத்தவாறு அரிசியை கழுவி பானையில் போட்டுகொண்டிருந்தாள்.

குளிக்க சென்ற சாமியோ வீட்டுக்குள் வந்ததுதான் தாமதம் அம்மா பஸ்சுக்கு நேரம்மாச்சு சீக்கிரம் சோறு போடுமா என்று கத்தியவாறு துணி காயபோட்ட இடத்தைநோக்கி சென்றான். அவனுக்கு இருக்கும் ஒரே பாண்டும் துவைத்து போட்டதால் சுருங்கி போய் இருந்தது. அம்மா கொஞ்சம் சுடு சோறு போடுமா என்னோட பாண்டை அயர்ன் பண்ணிடுறேன் என்றான். அம்மாவோ ஒரு தட்டு நிறைய சோறை போட்டு அவனிடம் கொடுக்க அவன் டவலை கைகளில் சுற்றி தட்டின் அடிபாகத்தால் தேய்க்க பாண்டின் சுருக்கமும் நீங்கியது. அம்மா கொண்டுவந்த தேங்காய் துவையலும் உப்பு தண்ணியும் சேர்த்து இருந்த சுடு சோறில் பிசைந்து சாப்பிட்டான். அம்மா நான் போய்கிட்டு வரேன் என்று எட்டு மணி பஸ்ஸை பிடிக்க ஓடினான்.

அதற்குள் மாற்ற குழந்தைகளான திலகன், ஜெயா, குமார் ஆகியோரும் வயலுக்கு சென்று புல்லு அறுத்துவிட்டு வாய்க்காலில் குளித்துவிட்டு வீட்டுக்குள் வந்தார்கள். அவர்களும் அம்மா பள்ளிக்கூடத்துக்கு போகணும் சாப்பாடு தாம்மா என்று கசங்கி போன சட்டையும் கிழிந்து போன நிக்கரையும் போட்டுவிட்டு அடுப்பங்கரைக்குள் வந்தார்கள். அதற்குள் அம்மா ஒரு பெரிய பத்திரம் நிறைய சோறுவடித்த காஞ்சியில் சிறிது உப்பும், தேங்காயும், வறுத்த உளுந்தும் போட்டு அவர்கள் முன்னால் வைத்தாள். அவர்களும் அமைதியாக கஞ்சியை குடித்துவிட்டு பள்ளிக்கு கிளம்பினார்கள்.

காலையில் இருந்தே வீட்டுவேலை செய்துகிட்டு இருந்த அம்மாவுக்கும் பசி எடுக்க ஆரம்பித்தது. மெதுவாக சென்று அடுப்பில் இருந்த சோற்றுபானையை உற்றுபார்த்தாள் அரைபானை சோறு தான் இருந்தது. இப்போது சாப்பிட்டால் ராத்திரிக்கு சோறு பத்தாது என்று நினைத்தவாறு என்றைக்கும் போல் பட்டினியை போக்க தண்ணீர் நிரம்பிய பானையை நோக்கி சென்றாள்....



1 comment:

Vadielan R said...

நெஞ்சை உருக்கி விட்டது தாயின் பாசம் நல்ல தலைப்பு வையுங்கள் தாய்பாசம்

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats